ஒவ்வொரு மாதமும் வரவு செலவுப் பட்டியல் போடும் போது, ஏதாவது ஒரு செலவைக் குறைத்தால் கையில் கொஞ்சம் பணம் மிச்சமாகுமே என்று நினைப்போம். ஆனால், எதைக் குறைப்பது? எல்லாமே, தவிர்க்க முடியாத செலவுகளாகத் தான் இருக்கும். அதிலும், நம் செலவுப் பட்டியலில், சராசரியாக, 10% முதல் 15% வரை மின் கட்டணம் மட்டுமே ஆக்கிரமித்து விடும். கொஞ்சம் முயற்சி செய்தால், மின் கட்டணத்தை, கணிசமான அளவுக்கு நாம் மிச்சப்படுத்தலாம். சரி! இனிவரும் மாதங்களில், மின் கட்டணத்தைக் குறைப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
ஒளி உமிழும் இரு முனைய விளக்குகள் (எல்.இ.டி விளக்குகள் – LED Bulbs) மின்சாரத்தை வெகுவாக சேமிக்கும்: கீழே உள்ள பட்டியலில் இருக்கும் பழைய காலத்து மின் விளக்குகள் ஏதேனும், உங்கள் வீட்டில் இருந்தால், அவற்றை நீக்கி, அதற்குப் பதில், எல்.இ.டி விளக்குகளைப் (LED Bulbs) பொருத்தவும்.
- குமிழ் மின் விளக்குகள் (Incandescent Lamps),
- குழல் வடிவ ஒளிர் மின் விளக்குகள் (வழக்கமான ஃப்ளூரெசெண்ட் ட்யூப் லைட் – Fluorescent Tube Lights),
- கச்சிதமான ஒளிர் மின் விளக்குகள் (சி.எஃப்.எல் விளக்குகள் – CFL Lamps – Compact Fluorescent Lamps)
எல்.இ.டி விளக்குகள்(LED Bulbs) பிற வகை விளக்குகளை விட, விலை சற்று அதிகமாக இருக்குமே என்று நீங்கள் நினைக்கலாம். வேகமாக வளர்ந்து வரும் இன்றைய தொழில் நுட்பக் காலக் கட்டத்தில், எல்.இ.டி. விளக்குகளின், விலை வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது.
36 அல்லது 20 வாட் திறன் கொண்ட பழைய குழல் விளக்கு (ட்யூப் லைட்) அல்லது சி.எஃப்.எல் விளக்குக்குப் பதில், அதே விலையில், அல்லது அதை விடக் குறைந்த விலையில், 20 அல்லது 9 வாட் திறன் கொண்ட எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தி, ஏறக்குறைய, அதே வெளிச்சத்தைப் பெறலாம்.
உதாரணத்திற்கு, உங்கள் வீட்டில் மொத்தம் இரண்டு (36 வாட்) பழைய வகை குழல் (ட்யூப் லைட்) மற்றும் எட்டு (20 வாட்) சி.எஃப்.எல் விளக்குகள் இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.
சராசரியாக இந்த விளக்குகளை 4 மணி நேரம் பயன்படுத்தினால், ஒரு மாதத்திற்கு (30 நாட்கள்), எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்று பார்ப்போம்.
பழைய வகை விளக்குகள்:
- 2 பழைய வகை குழல் விளக்குகள் x 36 வாட் x 4 மணி நேரம் x 30 நாட்கள் = 8,640 வாட்.மணி = 8.64 கிலோ வாட் மணி = 8.64 யூனிட் மின்சாரம்
- 8 சி.எஃப்.எல். x 20 வாட் x 4 மணி நேரம் x 30 நாட்கள் = 19,200 வாட் மணி = 19.2 கிலோ வாட் மணி = 19.2 யூனிட் மின்சாரம்
மொத்த பழைய வகை விளக்குளின் 1 மாதத்திற்கான மின் பயன்பாடு = 8.64 யூனிட் மின்சாரம் + 19.2 யூனிட் மின்சாரம் = 27.84 யூனிட் மின்சாரம்
தமிழ் நாட்டில், 2 மாதத்திற்கான மின் கட்டணம் கட்டுவதாக வைத்துக் கொண்டால் இரண்டு மாதத்திற்கான மின் பயன்பாடு = 27.84 X 2 = 55.68 யூனிட் மின்சாரம்
எல்.இ.டி விளக்குகள்: பழைய விளக்குகளுக்குப் பதில், 18 வாட் திறன் கொண்ட, 2 எல்.இ.டி. குழல் மின் விளக்குகள் மற்றும், 9 வாட் திறன் கொண்ட 8 எல்.இ.டி. குமிழ் வடிவ விளக்குகளைப் பயன்படுத்துவதாகக் கொள்வோம்.
- 2 எல்.இ.டி. குழல் விளக்குகள் (எல்.இ.டி. ட்யூப் லைட்) x 18 வாட் x 4 மணி நேரம் x 30 நாட்கள் = 4,320 வாட்.மணி = 4.32 கிலோ வாட்.மணி = 4.32 யூனிட் மின்சாரம்
- 8 எல்.இ.டி. குமிழ் விளக்குகள் (எல்.இ.டி. பல்புகள்) x 9 வாட் x 4 மணி நேரம் x 30 நாட்கள் = 8,640 வாட்.மணி = 8.64 கிலோ வாட்.மணி = 8.64 யூனிட் மின்சாரம்
மொத்த எல்.இ.டி. வகை விளக்குளின் 1 மாதத்திற்கான மின் பயன்பாடு = 4.32 யூனிட் மின்சாரம் + 8.64 யூனிட் மின்சாரம் = 12.96 யூனிட் மின்சாரம்
தமிழ் நாட்டில், 2 மாதத்திற்கான மின் கட்டணம் கட்டுவதாக வைத்துக் கொண்டால் இரண்டு மாத்திற்கான மின் பயன்பாடு = 12.96 x 2 = 25.92 யூனிட் மின்சாரம்
எல்.இ.டி. பயன்பட்டால் ஏற்படும் மின் சேமிப்பு = 55.68 – 25.92 = 29.92 யூனிட் மின்சாரம் = 30 யூனிட் மின்சாரம் (தோராயமாக)
தமிழ் நாடு மின் வாரியக் கட்டண விதிகளின் படி(TANGEDCO) 101-200 யூனிட் மின் பயன்பாட்டிற்கு ஒரு வித கட்டணம், 200-500 ஒரு கட்டணம், 501 யூனிட்டுக்கு மேல் , ஒரு வித கட்டணம் என்று இருக்கும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் 501 யூனிட்டுக்கு மேல் கட்ட வேண்டியுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தின் இணைய தளத்தில், கீழ்க்கண்ட முகவரியில், மின் கட்டணக் கணிப்பான் உள்ளது.
தமிழ்நாடு மின் வாரிய கட்டணக் கணிப்பான் (TNEB Bill Calculator)
இதன்படி, இரண்டு மாதங்களில் 500 அலகு (யூனிட்) மின்சாரத்துக்கு (வீட்டுப் பயன்பாட்டிற்கான) கட்டணம், ரூபாய். 1130.
இரண்டு மாதங்களில், 530 அலகு (யூனிட்) மின்சாரத்துக்கு (வீட்டுப் பயன்பாட்டிற்கான கட்டணம்), ரூபாய். 1978.
மேலே நாம் பார்த்த உதாரணத்தின்படி, எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தி, நாம் 30 யூனிட் மின்சாரத்தைச் சேமித்தால், ரூபாய். 848 ஐ இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சேமிக்கலாம். அதாவது ஒரு ஆண்டுக்கு, ரூபாய். 5,088 ஐ சேமிக்கலாம் !
எல்.இ.டி. விளக்குகளின் பயன்பாடுகள்:
- குறைந்த விலை
- அதிக வெளிச்சம்
- குறைந்த அளவு மின்சாரத் தேவை
- குறைந்த மின் கட்டணம்
- சுற்றுச் சூழல் மாசுபாடு இல்லை.
எல்.இ.டி. விளக்குகளை நாம் பயன்படுத்துவதால், நம் வீடு மட்டும் இல்லை; நாம் நாடும் நன்மை அடைகிறது.