(கைபேசி) ஸ்மார்ட்ஃபோன் (Smartphone / Mobile Phone Buying Tips) வாங்கும் முன் சிந்திக்க வேண்டியவற்றைப் பற்றி கடந்த இரண்டு பகுதிகளில் (பகுதி-1, பகுதி-2) பார்த்தோம். குறிப்பாக, சென்ற பகுதியில் (பகுதி-2) ப்ராசெசர் (Mobile Processor), ரேம் (RAM) மற்றும் ராம் (ROM) ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இந்த பகுதியில், ஒலி (Sound), காட்சித் திரை துல்லியத் தன்மை (Smartphone Screen Resolution), கேமெரா (Camera), 4ஜி (4G), எஸ்.ஏ.ஆர் (SAR) போன்ற கைபேசியின் மற்ற தொழில்நுட்பக் குறிப்புகள் (Technical Specifications of Smartphones) பற்றிப் பார்ப்போம்.
- ஒலி (Sound): கைபேசியின் ஒலியின் தரம் (Sound Quality of Smartphone / Mobile Phone) எப்படி உள்ளது என்பதை சோதித்துப் பார்க்கவும். அழைப்பு வரும்போது நீங்கள் கேட்கும் ஒலி துல்லியமாக உள்ளதா என்பதை கவனியுங்கள். அதை மூன்று விதமாக சோதிக்கலாம். (1) ஒலிப்பெருக்கி அமைப்பு இல்லாமால் (Without Speaker Mode), சாதரணமாக தொலைபேசி அழைப்பை ஏற்று கேட்டுப் பாருங்கள்; (2)காதில் அணியும் கருவியைக் கொண்டு (Earphones) அழைப்பை ஏற்று கேட்டுப் பாருங்கள்; (3) ஒலிப்பெருக்கி அமைப்பில் (Speaker Mode) போட்டு அழைப்பை ஏற்று ஒலியைக் கேட்டுப் பாருங்கள். இப்படி 3 விதமாக கேட்க்கும் போதும், எந்த இரைச்சலும் இல்லாமல், கைபேசியின் ஒலி அமைப்பு துல்லியமாக இருக்கிறதா என்று கவனிக்கவும். கைபேசியை நீங்கள் இசையைக் கேட்பதற்கு அதிகம் பயன்படுத்துவதாக இருந்தால், உங்கள் திட்டமிட்ட தொகைக்குள் இருப்பின், டால்பி ஒலி / ஆடியோ (Dolby Audio) அமைப்பு உள்ள கைபேசியா என்று பார்க்கவும். இதை கைபேசியின் தொழிநுட்பக் குறிப்புகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும், காதில் அணியும் கருவியைக் கொண்டு (Earphones), பாடல் அல்லது இசையை போட்டு கேட்டு ஒலியின் தரம் மற்றும் இசையின் துல்லியம் நன்றாக உள்ளதா என்று கவனித்துப் பார்க்கவும்.
- காட்சித் திரை அளவு / துல்லியத் தன்மை / அடர்த்தி (Smartphone / Mobile Phone Display Size / Screen Resolution / Pixel Density – Pixels Per Inch – PPI): காணொளி (வீடியோ / Video) மற்றும் புகைப்படங்களை (ஃபோட்டோக்கள் / Photos) பார்க்கும் தேவை உங்களுக்கு அதிகமாக இருந்தால், காட்சித் திரை அளவு / துல்லியத் தன்மை / அடர்த்தி – இவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும்.
- உங்கள் கைபேசியின் காட்சித் திரையின் அளவு (Smartphone Display Size) உங்கள் விருப்பத்தையும் திட்டமிட்ட தொகையையும் பொறுத்தது. பொதுவாக, காட்சித் திரையின் அளவு எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு, கைபேசியின் அளவு அதிகரிக்கும். பெரிய கைபேசியை நீண்ட நேரம் வைத்து, இயக்கிக் கொண்டு இருந்தால், கை மற்றும் விரல்களில் ஒரு விதமான வலி அல்லது மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்படக்கூடும். இதை மனதில் கொண்டு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாதவாறு, உங்கள் கைக்கு அடக்கமான கைபேசியைத் தேர்ந்தெடுக்கவும்.
- கைபேசியின் திரையின் துல்லியத்தன்மையை (Screen Resolution of Smartphone), உயர் துல்லியத்தன்மை (ஹை டெஃப்னிஷன் / High Definition – ஹெச்.டி / HD), முழு உயர் துல்லியத்தன்மை (ஃபுல் ஹை டெஃப்னிஷன் / Full High Definition – ஃபுல் ஹெச்.டி / எஃப்.ஹெச்.டி / FHD / Full HD), இரு மடங்கு உயர் துல்லியத்தன்மை (2கே / க்வாட் ஹை டெஃப்னிஷன் / Quad High Definition – க்யூ.ஹெச்.டி / 2கே / QHD / 2K), அதி உயர் துல்லியத்தன்மை (4கே அல்ட்ரா ஹைடெஃப்னிஷன் / 4K Ultra High Definition – 4கே அல்ட்ரா ஹெச்.டி / 4K Ultra HD) என்று பல வகைப்படுத்தலாம்.
- ஹெச்.டி / HD – 1280 x 720 பிக்செல்ஸ்
- ஃபுல் ஹெச்.டி / எஃப்.ஹெச்.டி / FHD / Full HD – 1920 x 1080 பிக்செல்ஸ்
- க்யூ.ஹெச்.டி / 2கே / QHD / 2K – 2560 x 1440 பிக்செல்ஸ்
- 4கே அல்ட்ரா ஹெச்.டி / 4K Ultra HD – 3840 x 2160 பிக்செல்ஸ்
பொதுவாக, தற்போது சந்தையில், ஹெச்.டி மற்றும், ஃபுல் ஹெச்.டி துல்லியத்தில் கைபேசிகள் கிடைக்கின்றன. இவை இரண்டையும் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். கைபேசியின் காட்சித்திரையின் தரம், அதன் துல்லியத்தன்மையைப் பொறுத்தது. ஒரு கைபேசியின் காட்சித்திரை தரமானதாக இருக்க வேண்டுமெனில், அதன் துல்லியத்தன்மை குறைந்தது ஹெச்.டி (HD) ஆக இருக்க வேண்டும். அதாவது, காட்சித்திரை குறைந்தது 1280 x 720 பிக்செல்கள் கொண்ட திரையாக இருக்க வேண்டும். பிக்செல் என்பது பிக்சர் எலிமெண்ட்ஸ் (Picture Elements) என்பதன் சுருக்கம். கைபேசியின் காட்சித்திரையில் தெரியும் படங்கள் சிறு சிறு நுண் கட்டங்களாக பகுக்கப்பட்டு இருக்கும். இந்தக் கட்டங்களின் (பிக்செல்கள்) எண்ணிக்கையும் (Number of Pixels), அடர்த்தியும் (Pixels Per Inch – PPI) எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு காட்சித்திரையின் துல்லியத்தன்மை அதிகமாக இருக்கும்.
ஹெச்.டி (HD) திரையில் 1280 x 720 பிக்செல்கள் இருக்கும். அதாவது, செங்குத்தாக (Vertically) 1280 பிக்செல்களும், பக்கவாக்கில் (Horizontally) 720 பிக்செல்களும் இருக்கும். 4.3 அங்குலம் மூலைவிட்டம் கொண்ட கைபேசியில், செங்குத்துவாக்கில் மற்றும் பக்கவாக்கில் எப்படி பார்த்தாலும், ஒரு அங்குலத்திற்கு 342 பிக்செல்கள் என்ற வீதத்தில் பிக்செல் அடர்த்தி (Pixel Density / Pixels Per Inch – PPI) இருக்கும். அதேபோல் 4.7 அங்குலம் மூலைவிட்டம் கொண்ட கைபேசியின் பிக்செல் அடர்த்தி 312 PPI ஆக இருக்கும். கைபேசி ஹெச்.டி (HD) திரையைக் கொண்டதாக இருந்தாலும், அதன் அளவு அதாவது மூலைவிட்டம் அதிகமானால், பிக்செல் அடர்த்தி (பி.பி.ஐ -PPI) குறைந்து விடும். இதன் பொருள், 4.3 அங்குலம் மற்றும் 4.7 அங்குலம் அளவுடைய இரண்டு கைபேசிகளுமே ஹெச்.டி (HD) திரையை உடையனவாக இருந்தாலும், 4.3 அங்குலம் அளவுடைய கைபேசியின் பிக்செல் அடர்த்தி (பி.பி.ஐ -PPI) அதிகமாக இருப்பதால், அதன் துல்லியத்தன்மை 4.7 அங்குலம் அளவுடைய, கைபேசியை விட அதிகமாக இருக்கும்.
ஃபுல் ஹெச்.டி / எஃப்.ஹெச்.டி / FHD / Full HD – 1920 x 1080 பிக்செல்கள் கொண்ட கைபேசியில், செங்குத்தாக 1920 பிக்செல்களும், பக்கவாக்கில் 1080 பிக்செல்களும் இருக்கும். 5 அங்குலம் கொண்ட கைபேசியின் பிக்செல் அடர்த்தி 441 பி.பி.ஐ -PPI ஆக இருக்கும். 5.5 அங்குலம் கொண்ட கைபேசியின் பிக்செல் அடர்த்தி 401 பி.பி.ஐ -PPI ஆக இருக்கும்.
ஆய்வின் படி, பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவுள்ள கைபேசியை, ஒரு குறிப்பிட்ட தொலைவில் வைத்துப் பார்த்தால், பிக்செல் அடர்த்தி 300 பி.பி.ஐ -PPI- ஆக இருந்தாலே போதுமானது. அதற்கு மேல் பி.பி.ஐ -PPI மதிப்பு எவ்வளவு அதிகமானலும், நம் கண்களால் கைபேசியில் தெரியும் படக் காட்சியின் துல்லியத்தன்மையை வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
கைபேசியின் அளவுக்கும், துல்லியத்தன்மைக்கும் ஏற்ப அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். உங்கள் தேவைக்கேற்ப, நீங்கள் முடிவு செய்து கொள்ளவும்.
- கைபேசி கேமெரா (ஸ்மார்ட் ஃபோன் கேமெரா / Smartphone Camera): தற்போது சந்தையில், மிக அதிக மெகா பிக்செல்களுடன் பின்பக்கம் இரட்டை லென்ஸ் கேமெராவும் (Dual-Lens Rear Camera), முன் பக்கம் ஒரு செல்ஃபி கேமெராவும் (Front Selfie Camera) கொண்ட கைபேசிகள் (Smartphones) கிடைக்கின்றன. உதாரணமாக,
- 12 மற்றும் 5 மெகா பிக்செல்கள் – எம்.பி. (Mega Pixels – MP) கொண்ட பின்பக்க இரட்டை லென்ஸ் கேமெரா மற்றும் 16 எம்.பி (MP) கொண்ட முன்பக்க செல்ஃபி கேமெரா;
- 16 மற்றும் 2 எம்.பி (MP) கொண்ட பின்பக்க இரட்டை லென்ஸ் கேமெரா மற்றும் 8 எம்.பி (MP) கொண்ட முன்பக்க செல்ஃபி கேமெரா;
- 13 மற்றும் 5 எம்.பி (MP) கொண்ட பின்பக்க இரட்டை லென்ஸ் கேமெரா மற்றும் 8 எம்.பி (MP) கொண்ட முன்பக்க செல்ஃபி கேமெரா;
என்று பலவித துல்லியத்தன்மை கொண்ட கேமெராக்களை உடைய கைபேசிகள் கிடைக்கின்றன. அதிகமெகா பிக்செல்கள் – எம்.பி. (Mega Pixels – MP) கொண்ட கேமெராக்கள் மிகத் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவும். உங்கள் தேவைக்கேற்ப கேமெராக்கள் உள்ள கைபேசியைத் தேர்ந்தெடுக்கவும்.
- 4ஜி கைபேசி (4G Phone): தற்போது சந்தையில் பெரும்பாலும் அனைத்து கைபேசிகளும் 4ஜி (4G) தொழில்நுட்ப கைபேசிகளாவே வெளி வருகின்றன. இருந்தாலும், நீங்கள் கைபேசியை வாங்கும் முன், அது 4ஜி (4G) கைபேசிதானா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
- குறிப்பிட்ட உள் வாங்கும் விகிதம் (ஸ்பெசிஃபிக் அப்சார்ப்ஷன் ரேட் / எஸ்.ஏ.ஆர் / Specific Absorption Rate / SAR): கைபேசிகள் வெளியிடும் ரேடியோ அதிர்வெண் மின்காந்த அலைகளை நம் உடல் உள்வாங்கக் கூடும். இது நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஃபெடெரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (Federal Communications Comission – FCC), கைபேசிகள் வெளியிடும் இந்த ரேடியோ அதிர்வெண் மின்காந்த அலை உமிழ்வின் அளவைப் பாதுகாப்பு எல்லைக்குள் வைக்க ஒரு தரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. அமெரிக்காவில், கைபேசிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஏ.ஆர் / SAR-ன் அளவு 1.6 வாட் / கிலோகிராம். ஐரோப்பாவில் இதன் கட்டுப்பாட்டு அளவு 2 வாட் / கிலோகிராம். தற்போது, இந்தியாவிலும் அமெரிக்காவைப் போலவே சந்தையில் விற்கப்படும் கைபேசிகளின் எஸ்.ஏ.ஆர் / SAR-ன் அளவு 1.6 வாட் / கிலோகிராம் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நீங்கள் வாங்கும் கைபேசியின் தொழில்நுட்பக் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள எஸ்.ஏ.ஆர் / SAR-ன் அளவு 1.6 வாட் / கிலோகிராம்-க்குள் உள்ளதா எனப் பார்த்து வாங்கவும். நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஏ.ஆர் / SAR அளவுள்ள கைபேசி முற்றிலும் மின்காந்த அலைகளை உமிழாது என்று பொருளில்லை. அந்த அளவு ஒரு பாதுகாப்பு எல்லைக்குள், குறைவான அளவாக இருந்தாலும், மின்காந்த அலைகளை உள் வாங்குவதால், நம் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடும். தலையில் இருந்தும், உடலில் இருந்தும் கைபேசியை தள்ளி வைத்து பயன்படுத்துவதால், மின்காந்த அலை உமிழ்வில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். இதற்கு, ஃபெடெரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (Federal Communications Comission – FCC) மற்றும் டெலிகாம் எஞ்சினீயரிங் சென்டெர் (Telecom Engineering Centre (TEC)) போன்ற தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்களின் அறிவுரைகளின் படி, ஒலிப்பெருக்கி (Loud Speaker) அல்லது காதில் அணியும் கருவிகளைப் (Ear Phones) பயன்படுத்துவதால் கைபேசி நம் உடலில் படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். அதனால், நீங்கள் வாங்கும் கைபேசியில் ஒலிப்பெருக்கி (Loud Speaker) வசதி மற்றும் காதில் அணியும் கருவிகளைப் (Ear Phones) பயன்படுத்தும் வசதி இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
- இந்தியாவில் சந்தையில் விற்கப்படும் சில பிரபலமான கைபேசிகளின் இணைய முகவரிகள் (ஆங்கில அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன): கைபேசியை வாங்கும் முன் பிரபலமான கைபேசி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய கைபேசிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். இது நீங்கள் திட்டமிட்ட விலையில் நீங்கள் எதிர்பார்க்கும் சிறப்புத்தன்மைகள் கொண்ட கைபேசியை தேர்ந்தெடுக்க உதவும்.
- சந்தையில் உள்ள கைபேசியைப் பற்றிய நுகர்வோர் கருத்துக்கள்: சந்தையில் கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட கைபேசியைப் பற்றி, நுகர்வோரின் கருத்துகளைத் தெரிந்து கொள்வதன் மூலம் அதன் நிறை மற்றும் குறைகளைப் பற்றி அறிய முடியும். இத்தகயை விவரங்களைக் கீழ்க்கண்ட மின் வணிக தளங்களில் (E-Commerce Websites) தெரிந்து கொள்ளலாம். இணைய முகவரிகள் ஆங்கில அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன: