குருவிரொட்டி இணைய இதழ்

பகுதி-1 – சிறந்த கைபேசி / ஸ்மார்ட் ஃபோன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

புதிதாக கைபேசி / ஸ்மார்ட் ஃபோன் (Smartphone) வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? சந்தையில் அண்மையில், மிகப் புதிதாக வந்த, எல்லா தனித்தன்மைகளையும் கொண்ட ஒரு கை பேசியை, மிகக் குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்று தான் நம்மில் பலர் நினைக்கிறோம்.  ஆனால், அப்படி வாங்கும் கைபேசி தரமானதாகவும், நீண்ட நாட்கள் எந்த சிக்கலும் இன்றி, உழைக்குமா? பொதுவாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையில்,  நல்ல கைபேசியை வாங்க முடியுமா? (How to Buy Good Smartphone at Reasonable Price?). சரி. எந்த கைபேசியை வாங்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்வது என்பது பற்றிக் கொஞ்சம் சிந்திப்போம்.

 

  1. கைபேசி வாங்கும் முன் நீங்கள் எந்த தேவைக்காக வாங்குகிறீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். உதாரணமாக, கைபேசி (Smartphone) பயன்படுத்துவோரின் தேவை ஆளாளுக்கு வேறுபடும்:
    • அலுவல் பணிகளுக்கு (Official / Business Usage) மட்டும் அதிகமாகப் பயன்படுத்துவோர்.
    • பொழுது போக்குக்காக மட்டும் அதிகம் பயன்படுத்துவோர். அதாவது, யூடியூப் காணொளிக் காட்சிகள் (யூடியூப் வீடியோக்கள் / Youtube Videos), இசை, திரைப்படங்கள், காணொளி விளையாட்டுகள் (வீடியோ கேம்கள் / Video Games) ஆகிய தேவைகளுக்காக அதிகம் பயன் படுத்துவோர்.
    • செல்ஃபி கேமெரா / பின்பக்க கேமெராக்களை (Selfie Camera/ Rear Camera) அதிகம் பயன்படுத்துவோர்.
    • இணைய உலாவிகள் (இன்டெர்னெட் ப்ரௌசெர்கள் / Internet Browsers) மற்றும் கைபேசிச் செயலிகளை ( மொபைல் ஆப்கள் / Mobile Apps) அதிகம் பயன்படுத்துவோர்.

     

    இதில், எந்த வகையைச் சார்ந்தவர் நீங்கள்? உங்கள் தேவைகளை மட்டும் சிறந்த வகையில் நிறைவு செய்யும் தரமான கைபேசிகளைத் (High Quality Smartphones that satisfy your “Needs”) தேர்ந்தெடுங்கள். இதனால், உங்களுக்குத் தேவையற்ற அம்சங்களுக்காக நீங்கள் அதிக பணம் செலவு செய்யத் தேவையில்லை.  பொதுவாக, சந்தையில் கிடைக்கும் கைபேசிகளுக்கு, ஒவ்வொரு சிறப்பம்சத்திற்கும் ஒரு விலை நிர்ணயிக்கப் பட்டு இருக்கும். நீங்கள் அதிக அம்சங்கள் கொண்ட கைபேசியை வாங்குவதால், அதிக பணம் செலவிட நேரிடும். ஒரு கைபேசியில், உங்களுக்குத் தேவையற்ற அம்சங்கள் என்று எதை, எப்படி கண்டுப் பிடிப்பது? சரி. இப்படி சிந்தித்துப் பாருங்கள். இதற்கு முன் நீங்கள் பயன்படுத்திய கைபேசிகளில் (ஸ்மார்ட் ஃபோன் / Smart Phone), கடந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் அதிகம் பயன்படுத்திய அம்சங்கள் எவை, பயன்படுத்தாத அம்சங்கள் எவை என்பதை பட்டியலிட்டுப் பாருங்கள். அதில், நீங்கள் பயன்படுத்தாத அம்சங்களாக, உதாரணத்திற்கு, காணொளி விளையாட்டுகள் (வீடியோ கேம்கள் / Video Games), செல்ஃபி கேமெரா (Selfie Camera) இருந்தால், இந்த அம்சங்களை மையமாக வைத்து அதிக விலையில் விற்கப்படும் ஸ்மார்ட் ஃபோன்களை, தவிர்த்து விடலாம்.

    அதற்குப் பதிலாக, நீங்கள் அதிகம் பயன்படுத்தும் அடிப்படை வசதிகளைக் கொண்ட,  அண்மைத் தொழில்நுட்பத்தில், நல்ல தரத்துடன் உருவாக்கப்பட்ட,  கைபேசிகளை வாங்குவதால், உங்களுக்குப் பணமும் மிச்சமாகும்; உங்கள் கைபேசியின் ஆயுளும் நீண்டதாக இருக்கும்.

 

சரி. வேறு எந்தத் தொழில்நுட்பக் குறிப்புகளை நாம் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்:

  1. ஓ.எஸ். (ஆப்பெரேட்டிங்க் சிஸ்டெம் / O.S. – Operating System) – உங்கள் ஃபோன் அண்மையில் வெளியிடப்பட்ட ஓ.எஸ். கொண்டு இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஆன்ட்ராய்ட் ஃபோன் வாங்குவதாக இருந்தால், அது அண்மை வெளியீட்டுப் பதிப்பாக ( ஆன்ட்ராய்ட் ஓரியோ 8.0.0 -க்கு மேல்- Latest Release Version – Android Oreo – Above 8.0.0) இருந்தால் நல்லது. அண்மை ஓ.எஸ். (ஆப்பெரேட்டிங்க் சிஸ்டெம்) பதிப்பை உடைய ஃபோன், எதிர் வரும்காலங்களில், வெளிவரும் புதிய பதிப்புகளை ஏற்கக்கூடியதாக இருக்க வாய்ப்பு உண்டு. கைபேசியை வாங்கும் முன், இதை நீங்கள் உறுதி செய்து கொள்வது நல்லது. இது ஒரு முக்கியமான அம்சம். ஓ.எஸ். புதிதாக இருந்தால்,
    • கைபேசி, எந்த சிக்கலுமின்றி, வேகமாக இயங்கும்;
    •  புதிய பாதுகாப்பு அம்சங்கள் (லேட்டெஸ்ட் செக்யூரிடி ஃபீச்சர்ஸ் – Latest Security Features) உடையதாக இருக்கும்;
    • புதிய கைபேசிச் செயலிகளை (மொபைல் ஆப்ஸ் – Mobile Apps) நிறுவ ஏற்புடையதாக இருக்கும்;
    • கைபேசி பேட்டெரியை செம்மையாகக் கட்டுப்படுத்தும்; இதனால் கைபேசியின் ஆற்றல் சேமிக்கப் படும்.

 

  1. பேட்டெரியின் ஆற்றல்பொதுவாக பேட்டெரியின் ஆற்றல் (Battery’s Energy) mAh-ல் குறிக்கப்பட்டு இருக்கும். இதில் எந்த அளவு அதிகமாக இருக்கிறதோ, அதற்கேற்ப நீண்ட நேரம் கைபேசியை நாம் பயன்படுத்தலாம். மேலும், நம் தேவைக்கேற்ப, பேட்டெரியின் ஆற்றல் நீடிக்கும். அளவாகப் பேசவும், குறிப்பிட்ட அளவு மட்டும், செயலிகளைப் பயன்படுத்துவதாகவும் இருந்தால், கணிசமான அளவு நேரம் பேட்டெரி நீடிக்கும். அதிக ஆற்றல் கொண்ட பேட்டெரியை உள்ளடக்கிய கைபேசி, அதிக விலைக்கு விற்கப்படும். மேலும், குறைந்த நேரத்தில் மின்னேற்றம் (Battery Charging) செய்யும் தன்மையுள்ள பேட்டெரி மற்றும் மின்னேற்றி (Battery Charger) உடைய கைபேசியின் விலை இன்னும் அதிகமாக இருக்கும். நீங்கள் தேவைக்கேற்ப மட்டும், கைபேசியைப் பயன்படுத்துதாக இருந்தால், பேட்டெரிக்காகவும் (Battery), மின்னேற்றிக்காகவும் (Charger), அதிக விலை கொடுப்பதைத் தவிர்க்கலாம். வேகமான மின்னேற்றி, மிக அதிக ஆற்றல் கொண்ட பேட்டெரி போன்றவை, எப்பொழுதும் பயணம் செய்து கொண்டு இருப்பவர்களுக்கும், நீண்ட நேரம் சந்தைப் படுத்துதல் (மார்க்கெட்டிங்க்) போன்ற களப்பணியில் (Field Work like Marketing) இருப்பவர்களுக்கும் தேவைப்படலாம். ஆனால், அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, தேவைப்படும்போது மின்னேற்றம் செய்யும் வசதி இருப்பதால், இத்தகைய சிறப்புத் தன்மைகளுக்காக சில நூறுகளை அல்லது சில ஆயிரங்களை அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கலாம். பொதுவாக, 3000 mAh அல்லது அதற்கும் மேல் உள்ள பேட்டெரிகள், நமக்கு நல்ல பயனுள்ளவையாக இருக்கும்.

அடுத்த பகுதியில் (பகுதி-2), கைபேசி வாங்கும் முன் சிந்திக்க வேண்டிய, மேலும் பல கைபேசித் தொழில்நுட்பக் கூறுகளை / வரையறைகளைப் (Technical Specifications of Smartphones) பார்ப்போம். (தொடரும்…)