நிலாவில் ஒரு சோதனை – நிலவில் சுத்தியையும் இறகையும் ஒரே நேரத்தில் விடுவித்தால் எது முதலில் தரையில் விழும்? Hammer-Feather Drop – Experiment in Moon
பூமியில் ஒரு சுத்தியையும், ஒரு இறகையும் ஒரே நேரத்தில் கைகளில் இருந்து விடுவித்தால் (Hammer-Feather Drop) எது முதலில் தரையில் விழும்? ஆம். சுத்திதான் முதலில் விழும் என்று உறுதியாகக் கூறலாம். சரி, இதே சோதனையை நிலவில் செய்தால் என்ன ஆகும்? சுத்தி-இறகு இவற்றுள் எது முதலில் விழும்? அவசரம் வேண்டாம், கொஞ்சம் சிந்தித்து விடை கூறுங்கள்!
அதற்கான விடை இதோ இன்றைய ஏன்-எப்படி பகுதியில்! சுத்தி, இறகு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் தான் நிலவில் தரையில் மீது விழும். சரி! ஏன் இப்படி நிகழ்கிறது?
இதற்குக் காரணம், நிலவில் காற்று இல்லை. வெற்றிடமாக (Vacuum) இருப்பதால், எந்தத் தடையும் இல்லாத காரணத்தால், ஒரே நேரத்தில் மேலிருந்து விடப்பட்ட எடை அதிகமான மற்றும் எடை குறைந்த பொருட்கள் ஒரே நேரத்திலேயே நிலவின் தரைப்பகுதியை அடையும்.
ஆனால், பூமியில் மட்டும் ஒரே நேரத்தில் கைவிடப்பட்ட, சுத்தியும் இறகும் ஏன் வெவ்வேறு நேரங்களில் தரையைத் தொடுகின்றன? அதாவது சுத்தி தரையை அடைந்த சிறிது நேரம் கழித்து, இறகு ஏன் மெதுவாக தரையை அடைகிறது?
பூமியில் வளிமண்டலக் காற்று இருப்பதால், எடை குறைந்த மெல்லிய இறகுக்கு காற்று ஒரு தடையாக இருக்கிறது. அதனால் இறகு, காற்றில் மெல்ல மெல்ல மிதந்து வந்து பூமியை அடைகிறது.
அமெரிக்காவின் நாசா (NASA) விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 1971-ஆம் ஆண்டு, அப்பல்லோ-15 நிலவுப்பயணத்தின்போது, நிலவில் இந்த சுத்தி-இறகு சோதனையைச் செய்து காட்டியது. கமாண்டர் டேவிட் ஸ்காட் (Commander David Scott) தொலைக்காட்சிகளுக்காக இந்த சோதனையை நிகழ்த்திக் காட்டினார். நாசாவின் அந்த காணொளிக்காட்சியை கீழேயுள்ள படத்தைச் சொடுக்கிப் பார்க்கவும்!