எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன?
எறும்புகள் வரிசையாக ஒழுக்கத்துடன் ஒரே கோட்டில் செல்வதைப் பார்த்திருப்பீர்கள்! சரி. அவற்றால் எப்படி அவ்வாறு நேர் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல முடிகிறது? இதற்கான விடையை இன்றைய ஏன்-எப்படி பகுதியில் பார்ப்போம்.
எறும்புகள் ஃபெரமோன்கள் (Pheromones) எனப்படும் வேதிப்பொருளை உமிழ்கின்றன. இந்த வேதிப்பொருளின் மூலம் அவை பல்வேறு விதமான செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றன. உணவு பற்றிய செய்தி, எதிரிகளைப்பற்றிய செய்தி, இருப்பிடம் பற்றிய செய்தி போன்ற வெவ்வேறு விதமான தகவல்கள், பல்வேறு விதமான ஃபெரமோன்கள் மூலம் பரிமாறப்படுகின்றன. எறும்புகள் அவற்றின் உணர்கொம்புகளின் (Antennae) மூலம் பிற எறும்புகள் உமிழ்ந்துள்ள ஃபெரமோன்களின் தன்மையைப் பொறுத்து அதில் பொதிந்துள்ள செய்தியைப் புரிந்துகொள்கின்றன.
உதாரணமாக, முதலில் ஓர் எறும்பு உணவைத் தேடிச் செல்லும். அது செல்லும் பாதையில் ஃபெரமோன்களை உமிழ்ந்து கொண்டே செல்லும். அதற்குப்பின் வரும் மற்றோர் எறும்பு அந்த வேதிப்பொருளின் மணத்தைக் கொண்டே அதே பாதையில் பின்தொடரும். அந்த இரண்டாவது எறும்பும் வேதிப்பொருளை உமிழ்ந்து கொண்டே செல்லும். அடுத்து தொடர்ந்து வரும் எறும்புகள் இதே பாதையில் வரிசையாக செல்வதற்கு இது ஏதுவாக இருக்கும்.
இவ்வாறாக தொடர்ந்து அடுத்தடுத்து வரும் எறும்புகளும் வேதிப் பொருளை உமிழ்ந்து கொண்டே செல்வதால் அந்த பாதை கனமான பாதையாக இருக்கும். இதன் மூலம் இந்த வரிசையில் தொடர்ந்து வரும் எறும்புகள் இந்த பாதையின் கனத்தை வைத்து இது அதிக போக்குவரத்து உள்ள பாதை என்றும், உணவு அதிக அளவில் கிடைக்கும் என்றும் உணர்ந்து கொள்ளும்.
எறும்பு, உணவு இருக்கும் இடத்தைக் கண்டறிந்தவுடன், அதே பாதையில் திரும்பி செல்லும். அப்போதும் ஃபெரமோன்களை உமிழ்ந்து கொண்டே செல்லும். இதன் மூலமும் அடுத்தடுத்து வரும் எறும்புகள் அந்தப் பாதையின் முடிவில் உணவு இருப்பதை அறிந்து கொள்ளும்.