குருவிரொட்டி இணைய இதழ்

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன?


மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன? – ஏன் எப்படி? – அறிவியல் உண்மைகள்

மின்மினிப் பூச்சிகள் (Fireflies) ஒளி உமிழ்வதைப் பார்த்திருப்பீர்கள்! அவை எப்படி அவ்வாறு ஒளிவீசிப் பறக்கின்றன என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று தெரிந்து கொள்வோம்!

மின்மினிப் பூச்சிகள் ஒருவித வேதி வினையை அவற்றின் உடலில் உருவாக்குகின்றன. இதன் காரணமாக அவற்றின் உடலிலிருந்து ஒளி வெளிப்படுகிறது. இதற்குப் பெயர் உயிர் ஒளி உமிழும் தன்மை (Bioluminescence).

லூசிஃபெரின் எனப்படும் கரிம மூலக்கூறுகள் லூசிஃபெரேஸ் எனப்படும் வினையூக்கிகளால் ஆக்சிஜனேற்றம் அடைந்து ஒளிரக்கூடியவை. மின்மினியின் உடலில் உள்ள லூசிஃபெரேஸ் எனும் ஒளி உமிழும் நொதிப் பொருளின் முன்னிலையில் லூசிஃபெரின் மற்றும் கால்சியம் அடினோசைன் ட்ரைபாஸ்பேட் ஆகியவை, ஆக்ஸிஜனுடன் இணைந்து வினைபுரியும்போது, ஒளி உருவாகிறது. 

ஒளி உருவாகத் தேவையான வேதிப் பொருட்களுடன் ஆக்சிஜனைச் சேர்ப்பதன் மூலம் மின்மினிப் பூச்சியானது, வேதி வினையின் தொடக்கம் மற்றும் முடிவைக் கட்டுப்படுத்துகிறது. இது பூச்சியின் ஒளி உறுப்பில் நிகழ்கிறது. ஆக்ஸிஜன் இருக்கும் போது ஒளி வெளிப்படுகிறது. அது இல்லாதபோது வெளிச்சம் மறைந்துவிடுகிறது.

மின்மினிப்பூச்சிகளுக்கு நுரையீரல்கள் கிடையாது. அவை, உடலின் வெளிப் பகுதியில் இருந்து உட்புறச் செல்களுக்கு ட்ராக்கியோல்கள் எனப்படும் ஒருவிதமான தொடர் குழாய்கள் மூலம், ஆக்சிஜனை எடுத்துச்செல்கின்றன.

மின்குமிழ்கள் (Electric Bulbs – மின் பல்புகள்) ஒளிரும் போது அதிக அளவில் வெப்பம் வெளிப்படுகிறது. ஆனால், மின்மினியின்  ஒளியானது குளிர்ந்த ஒளியாகும். இதன் ஒளியில் இருந்து வெப்ப வடிவில் ஆற்றல் வீணாவதில்லை.