நொறுக்குத் தீனி பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது? ஏன்?
நொறுக்குத் தீனி பொட்டலங்கள் (எ.கா. – உருளைக்கிழங்கு சீவல்கள் – Potato Chips) வாங்கும்போது, அப்பொட்டலங்களில் காற்று நிரம்பியிருப்பதை உணரமுடியும். அதில் என்ன வாயு அடைக்கப்பட்டிருக்கிறது? ஏன் அப்படி வாயு நிரப்பபட்டுள்ளது? இதற்கான விடைகளை இன்றைய ஏன்? எப்படி? பகுதியில் காண்போம்!
சரியாக பாதுகாக்கப்படாத அல்லது திறந்த கொள்கலன்களில் உள்ள உருளைக்கிழங்கு சீவல்கள், போன்ற எண்ணெயால் பொரிக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், நாளடைவில் கெட்டுப் போய் அதன் சுவை மற்றும் மணம் மாறிவிடக்கூடும்.
இதற்குக் காரணம், எண்ணெயால் பொரிக்கப்பட்ட உணவுகளில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருள்கள், காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வேதிவினை புரிந்து ஆக்சிஜனேற்றமடைகின்றன. இதற்கு ஆங்கிலத்தில் ரான்சிடிட்டி (Rancidity) என்று பெயர்.
இவ்வாறு தீனிகள் கெட்டுப்போகாமல் இருக்க, தயாரிப்பு நிறுவனங்கள், தீனிகள் அடைக்கப்பட்ட பொட்டலங்களில் நைட்ரஜன் வாயுவை நிரப்புகின்றன.
இதனால், பொட்டலத்தில் உள்ள தீனிகள் ஆக்சிஜனுடன் வினைபுரிவது தடுக்கப்படுகிறது.
இதன் மூலம், உணவுப்பொருள்கள் நீண்ட நாட்களுக்குக் கெடாமல், சுவை மற்றும் மணம் மாறாமல் அப்படியே இருக்கின்றன.
பொதுவாக, எண்ணெய் மற்றும் கொழுப்பை உள்ளடக்கிய உணவுப்பொருட்கள் ஆக்சிஜனேற்றம் அடையாமல் தடுக்க, அவ்ற்றுடன் சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அல்லது, காற்று உட்புகா உணவுப்பொட்டலங்கள் பயன்படுத்துவதன் மூலம், உணவுப்பொருட்கள் ஆக்சிஜனேற்றம் அடையும் வேகத்தைக் குறைக்க முடியும்.