இரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே இடைவெளி இருப்பது ஏன்?
இரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே இடைவெளிகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்! அப்படி இருப்பது ஏன்? அவ்வாறு இல்லாமல் ஒரே தண்டவாளமாக இருந்தால் என்னவாகும்? இதற்கான விடையை இங்கு காண்போம்!
தண்டவாளங்கள் எஃகு, அதாவது பெரும்பாலும் இரும்பை உள்ளடக்கிய உலோகக்கலவையால் ஆனவை. இரும்பு ஒரு சிறந்த வெப்பக்கடத்தி. கோடைக்காலங்களில், இரும்பு வெப்பமடைவதால், விரிவடைகிறது. அப்படி விரிவடையும்போது, தண்டவாளத்தின் நீளம் அதிகரிக்கிறது. தண்டவாளத்தின் இடையே உள்ள இடைவெளி, இரும்பு விரிவடைவதால் ஏற்படும் கூடுதல் நீளத்திற்கு இடம்கொடுக்கிறது.
கோடைக்காலத்தில் விரிவடைந்து இடைவெளியை நிரப்பிய தண்டவாளம், காலமாற்றத்தில் வெப்பநிலை குறைந்து, வெப்பமடைதல் நிகழ்வு குறைவதால் இறுகத் தொடங்குகிறது. இதனால், நீளம் குறைந்து, மீண்டும் தண்டவாளத்தில் இடைவெளி ஏற்படும். குளிர்க்காலங்களில் நன்றாக இறுகி, நீளம் குறைந்து, பழைய நிலைக்கே முழுமையாகத் திரும்பி விடும். இதனால், தண்டவாளத்தில் மீண்டும் இடைவெளி காணப்படும்.
ஒருவேளை, தண்டவாளத்தில் இத்தகைய இடைவெளி இல்லையெனில், அதன் நீளம் அதிகரிக்கும்போது அது வளைந்து விடும். இதனால், தண்டவாளம் சேதமடைந்து இரயில் விபத்துகள் ஏற்படக்கூடும்.
Be the first to comment