வெண் பொங்கல் போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது ஏன்?

வெண்பொங்கல்

வெண் பொங்கல் போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது ஏன்?

பொதுவாகவே, அதிகமாக உண்ட பிறகு, தூக்கம் வருவது போல் இருப்பது இயல்பு. அதிலும் வெண்பொங்கல், தயிர் சோறு போன்ற சில உணவு வகைகளை உண்டவுடன் நமக்கு உடனே தூக்கம் வருவது போல் இருக்கும்.

வெண்பொங்கல் என்றவுடனே பச்சரிசி, பாசிப்பருப்பு, முந்திரிப்பருப்பு, மிளகு, அனைத்தும் கலந்த நறுமணம் மிக்க சூடான நெய்ப்பொங்கல் நம் நினைவுக்கு வந்துவிடும். மேலும், அதனுடன் கத்தரிக்காய் சாம்பார், தேங்காய்ச் சட்னி, உளுந்து வடை (மெதுவடை) இவற்றையும் சேர்த்துக் கொடுத்தால், அது, காலைச் சிற்றுண்டி என்பதையும் மறந்து நாம் ஒரு பிடி பிடித்துவிடுவோம்.

அதை உண்ட பின்பு, நம் அலுவல் வேலையைத் தொடங்கினால், நம்மை அறியாமல் தூக்கம் வந்து நம் வேலையைக் கொஞ்சம் மெதுவாகச் செய்து கொண்டு இருப்போம்.

வெண் பொங்கல், தயிர் சோறு போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது ஒரு சாதாரண நிலையாகும். ஆனால், நம்மில் பலருக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்று வியப்பாக இருக்கும். இதற்கு பல அறிவியல் காரணங்கள் உள்ளன:

1. அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம்

  • வெண் பொங்கலில் பயன்படுத்தப்படும் நெல் அரிசி சோறு மற்றும் பருப்பு அதிக அளவில் கார்போஹைட்ரேட் கொண்டவை.
  • கார்போஹைட்ரேட் அதிகமாக உட்கொள்ளும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து பிறகு குறையும். இதனால் செரோட்டோனின் மற்றும் மெலட்டோனின் ஹார்மோன்கள் உற்பத்தியாகி தூக்கத்தை தூண்டுகிறது.

2. செரித்தல்

  • உணவை செரிக்க உடல் பெரும் அளவில் இரத்தத்தை வயிற்று பகுதியில் திருப்பி விடுகிறது. இதனால் மூளைக்கு போகும் இரத்தத்தின் அளவு குறைந்து தூக்கமாக தோன்றுகிறது.

3. டிரிப்டோபன் அமினோ அமிலம்

  • பொங்கலில் உள்ள பருப்புகளில் டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது செரோட்டோனின் மற்றும் மெலட்டோனின் உருவாக்கத்திற்கு உதவுகிறது, இதனால் மனம் அமைதியாகி தூக்கம் வரக்கூடும்.

4. வெண்பொங்கலின் மிதமான வெப்பம் மற்றும் அதன் மென்மையான, இதமான தன்மை

  • வெண் பொங்கல் வெதுவெதுப்பாகவும் மொத்தமாகச் சாப்பிட எளிதானதாகவும் இருப்பதால், மனதை அமைதியாக்கி தூக்கத்தை தூண்டக்கூடும்.

5. அதிகமாக உணவு உண்ணுதல்

  • வெண் பொங்கல் மிக சுவையானது என்பதால், அதிக அளவில் அதை நாம் உண்ணக்கூடும். இது செரிமானத்திற்கு கூடுதல் வேலை தந்து உடலுக்கு அதிக சோர்வு உண்டாக்கி தூக்கம் வர வைக்கிறது.

உணவு உண்டதும் ஏற்படும் தூக்கத்தை தவிர்க்க சில வழிகள்:

  • அளவாக உண்ணவும்.
  • வெண்பொங்கலுடன் காய்கறி அல்லது நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்க்கவும்.

அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.    – குறள்: 943

                                                   – அதிகாரம்: மருந்து, பால்: பொருள்

விளக்கம்:

உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது, நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.