கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது? (Why is the Sea Water Salty?)
உப்பின் சிறப்பு பற்றி யாரும் நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உப்பில்லாத உணவை நம் வாழ்வில் நினைத்துப் பார்க்கவே முடியாது. இந்த உப்பு கடலில் இருந்து கிடைக்கிறது என்று நம் எல்லாருக்கும் தெரியும். சரி. கடல் நீர் ஏன் இவ்வளவு உப்பாக அதாவது உவர்ப்புத் தன்மையுடன் உள்ளது? இதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்:
- நிலத்தில் விழும் மழை நீரில், வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் (Carbon dioxide) சிறிதளவு கலக்கிறது. இதனால் மழை நீர், சிறிதளவு கார்பானிக் அமிலத் (Carbonic Acid) தன்மையை அடைகிறது.
- சிறிதளவு அமிலத் தன்மை உடைய மழை நீர் பாறைகளின் மீது கடந்து வரும் போது, பாறைகளை அரிக்கிறது. இந்நிகழ்வின் போது ஏற்படும் வேதி மாற்றத்தால் (Chemical Reaction), மின்னூட்டம் பெற்ற அணுத்துகள்கள் அதாவது அயனிகள் (Electrically charged atomic particles or Ions) உருவாகின்றன. இந்த அயனிகள் மழை வெள்ளத்தில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, இறுதியில் கடலில் கலக்கின்றன. இந்த அயனிகளில் ஒரு பகுதியை கடலில் உள்ள உயிரினங்கள் பயன்படுத்திக் கொண்டாலும், பெரும்பான்மையான பகுதி கடலிலேயே தங்கி விடுகிறது.
- இந்த அயனிகளில் 90% (90 விழுக்காடு) சோடியம் மற்றும் குளோரைடு ஆகியவற்றை உள்ளடக்கியது. சோடியம் மற்றும் குளோரைடு உப்புத் தன்மை உடையது.
பல கோடி ஆண்டுகளாக, இவ்வாறு, ஆறுகளில் இருந்து, கடலுக்கு அடித்து வரப்படும் அயனிகள், கடலிலேயே தங்கி விடுவதால், கடல் நீர் உப்பாக இருக்கிறது. மேலும், கடல் நீர் ஆவியாகும் போதும், கடலில் உள்ள உப்பு வெளியேறாமல் கடலில் தங்கி விடுகிறது.