அய்யன் திருவள்ளுவர் சிலையின்வெள்ளிவிழா – கடல் நடுவில் உள்ள இந்தியாவின் முதல் கண்ணாடிப் பாலம்
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார். – குறள்: 989
– அதிகாரம்: சான்றாண்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம்புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.
முப்பால் தந்த வள்ளுவருக்கு முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் விண்ணை முட்டும் சிலை
“ஊழி பெயரினும் தாம் பெயரார்” எனும் குறளுக்கேற்ப அய்யன் திருவள்ளுவரின் சிலை, 2004-ஆம் ஆண்டு உலகை உலுக்கிய ஆழிப்பேரலையைச் (சுனாமி) சற்றும் பொருட்படுத்தாமல், எந்தவித சலனமும் இன்றி எதிர் கொண்டு, 25 ஆண்டுகளாக விண்ணைக் கடந்து முக்கடலின் நடுவே உயர்ந்து நிற்கிறது.
இந்தப் புத்தாயிரம் ஆண்டின் (Millennium) தொடக்கத்தில் மனித இனத்திற்கு மட்டுமன்றி, பிறப்பால் ஒன்றான எல்லா உயிர்க்கும் கிடைத்த மாபெரும் பரிசு தான் வெள்ளி விழா கண்ட இந்த அய்யன் திருவள்ளுவர் சிலை.
வானுயர்ந்து நிற்கும் நம் அய்யன் வள்ளுவனின் சிலைக்கு இது வெள்ளிவிழா ஆண்டு நிறைவு. இச்சிலையை நமக்குக் கொடை அளித்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவர் மனதில் கருத்துருவாக்கம் பெற்று, அதன் விளைவாக, வான்புகழ் கொண்ட வள்ளுவருக்கு விண்ணை முட்டும் சிலை குமரி முனையில் தோற்றுவிக்கப்படும் என்று அன்றைய முதல்வராக இருந்த போது அவர் உலகுக்கு அறிவித்த நாள் 31.12.1975.
பேரறிவுச் சிலைக்குக் (Statue of Wisdom) கண்ணாடிப்பாலம்
கருத்துருவாக்கம், சிலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அதற்கான 25 ஆண்டு கால விடாமுயற்சிகள், பின்னர், அதன் பலனாக, 01-01-2000 அன்று சிலையை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மட்டுமன்றி, சாதி, மதம், மொழிகளைக் கடந்து அனைத்துலகிற்கும் அர்ப்பணித்தது வரை முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இந்த அரும்பெரும் தமிழ்த்தொண்டு ஒப்பற்றது.
முத்தமிழ் அறிஞர் கலைஞரைத் தொடர்ந்து வள்ளுவர் சிலைக்கு மேன்மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, கடலுக்குக் நடுவில் வில்நாண் வடிவ அழகிய கண்ணாடி இழைப் பாலத்தை (Bow-String Glass Bridge) அமைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவைக் கொண்டாடியுள்ளார் நம் முதல்வர் மாண்புமிகு திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
இந்த அழகிய கண்ணாடிக்கூண்டுப் பாலம், எவ்வித இயற்கைப் பேரிடரையும் தாங்கும் விதமாக புதிய தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப்பாலம், திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கிறது.
மேலும், இந்த வெள்ளிவிழாவில், அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு “பேரறிவுச் சிலை” (Statue of Wisdom) என்றும் அதிகாரப் பூர்வமாக அறிவித்து, அப்பெயரிடப்பட்டுள்ள அழகிய பெயர் வளைவைத் திறந்து வைத்தார் நம் முதல்வர்.
உலகிலேயே அறிவுக்கு, பேரறிவுக்குச் சிலை அமைந்துள்ளது நம் தமிழ்நாட்டில்தான்.
திருவள்ளுவர் சிலையின் சிறப்புகள்
- சிலை மற்றும் பீடத்தின் மொத்த உயரம் 133 அடி (41 மீட்டர்) ஆகும். இது திருக்குறளின் 133 அத்தியாயங்களைக் குறிக்கிறது.
- திருவள்ளுவரின் சிலையின் உயரம் 95 அடி (29 மீட்டர்)
- இது 38 அடி (12 மீட்டர்) பீடத்தில் நிற்கிறது. இது அறத்துப்பாலில் உள்ள 38 அதிகாரங்களைக் குறிக்கிறது.
- பீடத்தின் மேல் உள்ள சிலையின் 95 அடி உயரம், பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலில் உள்ள 95 அதிகாரங்களைக் குறிப்பிடப்படுகின்றன.
- சிலையின் மொத்த எடை 7000 டன்.
- சிலையின் எடை – 2,500 டன்
- பீடத்தின் எடை – 1,500 டன்
- பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை – 3,000 டன்
- மொத்தம் 3681 கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி இழைப் பாலத்தின் சிறப்புகள்
- இந்தியாவில் கடலின் குறுக்கே உள்ள முதல் கண்ணாடி இழைப் பாலம்
- இதன் வடிவமைப்பு வில்நாண் வடிவில் உள்ளது. எத்தகைய இயற்கைப் பேரிடரையும் தாங்கும் வண்ணம் உள்ளது.
- இந்தக் கண்ணாடிப் பாலத்தில் நடந்துகொண்டே கண்ணாடியின் வழியே பாலத்திற்கு அடியில் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் அழகைக் கண்டுகளிக்க முடியும்.
- இதன் நீளம் 77 மீட்டர் (256.67 அடி)
- பாலத்தின் மொத்த அகலம் 10 மீ (33 .33 அடி). இதில் ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடி இழையிலான தரைப்பகுதி நடுவே அமைந்துள்ளது. கண்ணாடியின் இருபுறங்களிலும் அழகிய பளிங்கு தரை அமைக்கப்பட்டுள்ளது
Be the first to comment